சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.
மீண்டும் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில் அமலாக்கதுறை தரப்பும், செந்தில் பாலாஜி தர்ப்பும் கடுமையான வாதங்களை முன் வைத்தனர்.
செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தை பொறுத்தவரை 'நான் இப்பொழுது அமைச்சராக இல்லை. அதேபோல் வழக்கில் என்னுடைய எந்தவிதமான தலையீடும் இருக்காது என ஏற்கனவே உறுதியளித்து விட்டேன். அப்படி இருக்கும் பொழுதும் தனக்கு பிணை வழங்காமல் இருப்பது தேவையில்லாத ஒன்று. மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட போது கொடுத்த தீர்ப்பு தனக்கும் பொருந்தும்' என செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் 'உங்களின் இடம் ஏற்கனவே கேள்விக்குறியாக்கப்பட்டு இருக்கிறது. நீங்கள் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள்; சாட்சியத்தை களைப்பீர்கள் என்ற வாதத்தை அமலாக்கத்துறை கடுமையாக முன் வைக்கிறார்கள்' என்றனர்.
அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு, 'தான் இப்பொழுது அமைச்சராக இல்லை. அப்படி இந்த விவகாரத்தில் இருந்து நான் குறுக்கு வழியில் தப்பிக்க வேண்டும் என்று நினைத்தால் நீதிமன்றத்திற்கு முன்பாகவே வந்திருக்க தேவையில்லை. எப்பொழுதோ அதை செய்திருக்க முடியும். வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன். வழக்கு தாமதப்படுத்தப்படுகிறது என்பதன் அடிப்படையில் தனக்கு பிணை வேண்டும். இந்த வழக்கில் ஏராளமானோரை விசாரிக்க வேண்டி இருக்கிறது. வாதங்கள் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளது. இது பல ஆண்டுகள் நடக்கக்கூடிய வழக்காக இருக்கிறது. அதுவரை தன்னால் சிறையில் இருக்க முடியாது. தனக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்'' என கேட்டுக் கொண்டனர்.
இதற்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அமைச்சராக இருந்தபோது இந்த வழக்கில் பல்வேறு தலையீடுகளை செய்ய முயன்றார். தமிழக அரசு இந்த விவகாரத்தில் விசாரணையை தாமதப்படுத்தி இருக்கிறார்கள் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கிறது. எனவே ஜாமீன் தரக்கூடாது' என்றனர். இந்த வழக்கில் சாட்சிகளாக இருப்பவர்கள் சார்பாகவும் வாதங்கள் வைக்கப்பட்டது. 'தங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது' செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்க கூடாது என சாட்சியங்கள் தரப்பும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கின்றனர்.