Skip to main content

சிக்கலில் இருந்து தப்பித்த தங்கலான் -  நீதிமன்றம் உத்தரவு

Published on 14/08/2024 | Edited on 14/08/2024
thangalaan release issue update

சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல முக்கிய நபர்கள் பணம் கொடுத்து வைத்திருந்தனர். இவர் அந்த பணத்தைப் பலருக்கும் கடனாகக் கொடுத்திருக்கிறார். இதில் நிதி இழப்பு ஏற்பட, அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்டார். பின்பு அவர் மரணமடைந்த நிலையில் அவரது சொத்துக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்டுப்பாட்டில் உள்ள, சொத்தாட்சியர் நிர்வகித்து, அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் கடன் வாங்கியவர்களிடமிருந்து அந்த தொகையை வசூலிக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறார். 

அந்த வகையில் அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தின் பங்குதாரர்களான ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் 2013ஆம் ஆண்டு 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர். இந்த தொகையை வட்டியுடன் திரும்பிக் கேட்டு சொத்தாட்சியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை ஞானவேல்ராஜாவும், ஈஸ்வரனும் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை.          

இதையடுத்து  ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்கக் கோரி சொத்தாட்சியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில் ரூ.10 கோடியே 35 லட்சம் கடன் தொகைக்கு 18 சதவீதம் வட்டியுடன் வழக்கறிஞர் கட்டணம் எனச் சேர்த்து மொத்தம் ரூ.24 கோடியே 34 லட்சம் தர வேண்டும் என்றும் இந்த தொகையை வழங்காத இவர்களைத் திவாலானவர்களாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் ஞானவேல் ராஜா , தங்கலான் படத்தை வெளியிடும் முன்பாக ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் செலுத்திய பின் படத்தை வெளியிடலாம் என்றும் குறிப்பிட்டது. அதே போல் ஞானவேல் ராஜா தயாரிக்கும் அடுத்த படமான கங்குவா படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவும் ரூ.1 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் டெபாசிட் செய்தது குறித்து பண வெளியீட்டிற்கு முன் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து அதனை ஒப்புதல் பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது ஞாவன்வேல் தரப்பில் நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1 கோடி சொத்தாட்சியர் கணக்கில் செலுத்தியதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், தங்கலான் படத்தை வெளியிட எந்த ஒரு தடையும் இல்லை என அறிவித்து வழக்கின் விசாரணையை வருகிற 28ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளது. 

ஞானவேல் ராஜா தயாரிப்பில் பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படம் நாளை (15.08.2024) வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகும் கங்குவா படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது நினைவுகூரத்தக்கது.   

சார்ந்த செய்திகள்