சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் 17 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 65 வீரர், 45 வீராங்கனை என மொத்தம் 110 பேர் களமிறங்கினர்.
இந்த ஒலிம்பிக்கில் ஒட்டுமொத்தமாக ஒரு வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை இந்திய அணி வென்றது. இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பிரதமர் மோடியை சுதந்திர தினமான இன்று (15.08.2024) டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் போது ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்கள், மனு பாக்கர், சரப்ஜோத் சிங் உள்ளிட்ட இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பிரதமரைச் சந்தித்தனர். இவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மேலும் இவர்களுடன் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷாவும் உடன் இருந்தார்.
இது தொடர்பாகப் பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரிஸ் ஒலிம்பிக்கில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியக் குழுவுடன் உரையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் விளையாட்டு அனுபவங்களைக் கேட்டறிந்து, விளையாட்டுத் துறையில் அவர்களின் சாதனைகளைப் பாராட்டினேன். பாரிஸ் சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன் ஆவார்கள். இந்திய அரசு விளையாட்டுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து, உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.