உலகம் முழுவதும் கரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் என்பது சொல்லி மாளாது. பொருளாதார ரீதியாக உலக நாடுகள் கரோனா தொற்றால் ஸ்தம்பித்து நிற்கின்றன. கோடிக்கணக்கானவர்கள் இதனால் வேலை இழந்து போய் உள்ளார்கள். இந்தியா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை மற்றும் உணவு இன்றி பல்வேறு மாநிலங்களில் இன்றும் தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அண்டை நாடான பாகிஸ்தானில் கரோனா தொற்றால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அந்த நாடு இதனைச் சமாளிப்பதற்குப் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றது. இந்தத் தொற்றால் வேலை இழந்த சுமார் 63,000-க்கும் மேற்பட்ட மக்களை அந்நாட்டு அரசு மரம் நடும் பணியில் ஈடுபடுத்தி வருகின்றது. அங்கு விவசாயத்திற்காக பல ஆயிரம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் இழப்பை ஈடுசெய்யும் நோக்கில் அரசு இந்த முயற்சியை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் 1,000 கோடி மரங்கள் நடும் திட்டத்தைக் கடந்த 2018ஆம் ஆண்டு அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.