மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த எட்டாம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். பயிற்சி மருத்துவர் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே சமயம் மருத்துவ மாணவியின் கொலை சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு ஆறாவது நாளாக மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. மருத்துவர்களின் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் மருத்துவ சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கைத் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நேற்று (14.08.2024) காலை 25 அதிகாரிகள் கொண்ட சிபிஐ அதிகாரிகள் தொடங்கினர். அதன் ஒரு பகுதியாகப் பெண் பயிற்சி மருத்துவர் கொலை செய்யப்பட்ட மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த தடயங்களைச் சிபிஐ அதிகாரிகள் சேகரித்தனர். இந்த குழுவில் சிறப்பு மருத்துவர்கள் குழு, சிறப்புத் தடயவியல் குழுவினரும் அடங்கியுள்ளனர். அதே சமயம் இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட சஞ்சய் ராயை சிபிஐயிடம் மாநில போலீசார் ஒப்படைத்தனர். அதோடு பெண் மருத்துவர் கொலை தொடர்பாக அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது.
அதோடு விசாரணைக்கு ஆஜராகுமாறு சஞ்சய் வசிஷ்ட், அருணவா தத்தா, சவுத்ரி, ரீனா தாஸ், அபூர்ச பிஸ்வால் மற்றும் மோலி பானர்ஜி ஆகிய 5 மருத்துவர்களுக்கு சிபிஐ சமன் அனுப்பியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சம்பவம் நடைபெற்ற மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலைக்கு நீதிகேட்டு போராட்டம் நடைபெற்றது. அச்சமயத்தில் போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் நாற்பதுக்கு மேற்பட்ட சமூக விரோதிகள் மருத்துவமனைக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களைச் சூறையாடினர். ஆர்ஜி கர் மருத்துவமனையைச் சூறையாடியது தொடர்பாக 9 பேரைக் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.