சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி (14.06.2023) அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்தன.
கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை தரப்பு என இரு தரப்பிற்கும் இடையே காரசார வாதங்கள் ஏற்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் மின்னஞ்சல் மூலம் தகவல் ஒன்றை அனுப்பியிருந்தது. அதில் இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப் போகிறோம் என்ற அறிவுறுத்தல் இருந்ததாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கு இன்று 62 ஆவது வழக்காக பட்டியலிடப்பட்டது.
இருப்பினும் இன்று நீதிமன்ற அலுவல் தொடங்கிய உடனே இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. அப்பொழுது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் வேறு ஒரு வழக்கில் இருப்பதால் அவரால் தற்போது இந்த வழக்கில் ஆஜராக முடியாது. எனவே வழக்கு விசாரணையை சற்று நேரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் மற்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரிப்பது செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு. ஆனால் மற்ற மூன்று வழக்குகள் ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு எதிராக நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்குகளையும் அமலாக்கத்துறை விசாரிக்கிறதா? இல்லையா? என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் என்று தெரிவித்த, நீதிபதிகள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் இதில் உள்ளனர். அவர்களையும் அமலாக்கத்துறை விசாரிக்க இருக்கிறதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு இன்றே ஜாமீன் கிடைக்குமா அல்லது இல்லையா என்பது நீதிமன்றத்தின் இந்த கேள்விக்கு அமலாக்கத்துறை சொல்லக்கூடிய பதிலையும், வாதத்தையும் பொறுத்துதான் அமையும் என்றும் கூறப்படுகிறது.