பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி மாலை வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் முக்கியமான நபர்களை காவல் துறையினர் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜேஷ், சிவசக்தி, பா.ஜ.க பிரமுகர் அஞ்சலை உட்பட 21 பேர் இதுவரை கைது செய்யப்பட்டனர். மேலும், தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் ஜூலை 14ஆம் தேதி அதிகாலை என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர், கொலைக்கான காரணம் என்ன என்பது மட்டும் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான சீசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோரைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்போ செந்தில் தாய்லாந்துக்குச் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதே சமயம் பெரம்பூரில் உள்ள அயனாவரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில், ஒன்றரை வயது மகள் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி. வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு தற்போது, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொற்கொடிக்கு சதீஷ் என்பவர் பெயரில் ஒரு மர்ம கடிதம் வந்துள்ளது. அதில் ஆம்ஸ்ட்ராங்கின் குழந்தையைக் கடத்தி அவருடைய குடும்பத்தைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த கடிதத்தில், ‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்துள்ள என் நண்பனை உடனடியாக விடுவிக்க வேண்டும். மறுத்தால் ஆம்ஸ்ட்ராங் மகள், மனைவியை கடத்திக் கொன்று விடுவோம். அடுத்தடுத்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தில் உள்ள நபர்களை வெடிகுண்டுகள் வீசி கொல்வோம்’ எனக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த கடிதத்துடன் செம்பியம் போலீசில், செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக, கொலை மிரட்டல் கடிதத்தில் இருந்த, செங்கல்பட்டு மாவட்டம், படூர் பஜனை கோவில் தெரு முகவரிக்குச் சென்று சதீஷ் என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, அந்த நபர், ‘தனக்கும் இந்த கடிதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாரோ தனது பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர்’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த நபரை விடுவித்த போலீசார், கூப்பிடும்போது காவல் நிலையத்துக்கு வரவேண்டும் எனக் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, குழந்தை வசித்து வரும் வீட்டிற்குத் துப்பாக்கி ஏந்திய முப்பதுக்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், பொற்கொடி வெளியே செல்லும்போதும் போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.