வேளாண் மசோதாக்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் போராட்டத்தில், தண்ணீரைப் பீய்ச்சு அடித்து போராட்டம் கலைக்கப்பட்ட சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மூன்று மசோதாக்களும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்தப் புதிய சட்டத்திற்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்தச் சட்டத்திற்கு எதிராகப் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ஹரியானா மாநிலம் சிர்சாவில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில், தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து போலீஸார் போராட்டக்காரர்களைக் கலைத்தனர்.