புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15- ஆவது சட்டப்பேரவைக்கான தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
இந்நிலையில் காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதியில் ஜான்குமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் அவரது மகன் நெல்லிதோப்பு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த, சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக மாற்று நபருக்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காமராஜ் நகர் மற்றும் நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அவரது ஆதரவாளர்கள்100-க்கும் மேற்பட்டோர் சித்தானந்தா நகர் பகுதியில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகம் முன்பு திடீரென குவிந்து ஜான்குமாருக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அவரது பதாகையை வைத்து முழக்கங்கள் எழுப்பினர். திடீரென அலுவலக முன்பு உள்ள ஷட்டரை உடைத்தும், பா.ஜ.க. தலைமை அலுவலக பேனரை கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து அங்கு வந்த கட்சி நிர்வாகிகளும் காவல்துறையினரும் அவர்களை சமாதானப்படுத்தி இது குறித்து மேலிடத்திற்கு தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து ஒரு மணி நேரமாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார், "நான் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருந்தால் என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக 20 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருப்போம். நானும் அமைச்சராகி இருப்பேன். ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைத்திருந்தால் கடந்த ஆட்சியில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட நிலைதான் ஏற்பட்டிருக்கும். அமைச்சர் பதவி கொடுப்பதாக மூன்று மாதமாக சொல்லிவிட்டு தற்போது வேறொருவருக்கு என்கிறார்கள்". இவ்வாறு அவர் கூறினார்.