மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து மே26 ஆம் தேதி குடியரசு தலைவரை சந்தித்து ஆட்சி அமைக்க மோடி உரிமை கோருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு முன்னர் கட்சி தாவிய வேட்பாளர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி 58 கட்சித்தாவிகளில் 13 வேட்பாளர்கள் மட்டுமே தங்களது தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். அதிலும் பிறகட்சிகளிலிருந்து பாஜகவுக்கு மாறியவர்களாக இருந்தால் அவர்கள் பெரும்பாலும் வெற்றி போட்டியில் இருக்கிறார்கள். ஆனால் மற்ற கட்சிகளுக்குள்ளோ அல்லது பாஜக விலிருந்து மற்ற கட்சிக்கோ தாவியவர்கள் தோல்வி முகத்திலேயே உள்ளனர்.
பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த சத்ருகன் சின்ஹா, ஐக்கிய ஜனதாதளத்திலிருந்து ராஷ்ட்ரிய ஜனதாதளத்துக்குத் தாவிய ஷரத் யாதவ், தேசியவாதக் காங்கிரஸிலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறிய தாரிக் அன்வர், பாஜகவிலிருந்து காங்கிரஸுக்கு மாறிய கீர்த்தி ஆசாத் ஆகியோர் தோல்வி முகத்தில் உள்ளனர்.
அதே நேரம் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக சார்பில் போட்டியிட்ட போஜ்பூரி நடிகர் ரவி கிஷன் ஷுக்லா, கர்நாடகாவில் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்குத் தாவிய 2 பேர், காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு மாறிய ராதாகிருஷ்ணன், சிவசேனாவிலிருந்து பாஜகவுக்குத் தாவிய பிரதாப் சிக்லிகர் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். இது ஒரு சுவாரசியமான சம்பவமாகவே பார்க்கப்படுகிறது.