இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3, நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு ஆகஸ்ட் 23 மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது.
இதனையடுத்து, நிலவில் தென் துருவத்தில் ஆய்வு தொடர்பான ரகசியங்களைத் தேடும் பணியை பிரக்யான் ரோவர் தொடங்கி நகர்ந்து வருகிறது. ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள், மண்ணில் உள்ள உலோகங்கள் பற்றிய விபரங்கள், அதன் தன்மையைப் பற்றியும் பரிசோதிக்க உள்ளது என இஸ்ரோ தெரிவித்திருந்தது. மேலும் பிரக்யான் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ரோவரின் செயல்பாடுகள் மற்றும் அது மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்த தகவல்களைக் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் விக்ரம் லேண்டரின் ஆய்வு கருவியான ஆர்ஏஎம்பிஎச்ஏ எல்பி (RAMBHA LP) என்ற கருவி மேற்கோண்ட ஆய்வு முடிவுகளை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் நிலவின் மேற்பரப்புக்கு அருகே பிளாஸ்மா இருப்பதை இந்த ஆய்வுக் கருவி உறுதி செய்துள்ளது. சூரிய வெப்பக் காற்றின் காரணமாக நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா உருவாகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இது மட்டுமின்றி ஒரு கன மீட்டருக்கு தோராயமாக 50 லட்சம் முதல் 3 கோடி எலக்ட்ரான்கள் அடர்த்தி உள்ளதாக இந்த கருவி கண்டறிந்துள்ளது.