சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிபதிகளான ராமச்சந்திரன் கலைமதி, கோவிந்தராஜன் திலகவதி, வழக்கறிஞர்கள் விக்டோரியா கவுரி, பி.பி.பாலாஜி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகிய 5 பேர் புதிய கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில் விக்டோரியா கவுரியின் நியமனத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. விக்டோரியா கவுரி பாஜவில் தீவிரமாக செயல்பட்டதாகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புணர்வு கருத்துகளை முன்வைத்துள்ளார் என்று கூறி விக்டோரியா கவுரியை நீதிபதியாக பரிந்துரை செய்யக்கூடாது என்று சென்னை வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதப்பட்டது. இருப்பினும் அவரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து விக்டோரியா கவுரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கு வரும் வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விக்டோரியா கவிரி இன்று காலை 10.35 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவுள்ள நிலையில், வழக்கின் முக்கியத்துவம் கருதி இன்று காலை 9.15 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்த நிலையில், தற்போது நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பீ.ஆர். கவாய் அடங்கிய இரண்டு பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு விசாரணையைத் தொடங்கவுள்ளது.