கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காததால், இழுபறி நிலை ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவும், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளமும் தனித்தனியாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரின. ஆனால், ஆளுநர் வஜுபாய் வாலா பாஜகவின் எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
எடியூரப்பாவிற்கு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ் - மஜத கூட்டாக உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் இரவு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை நள்ளிரவு விசாரிக்கப்பட்டது. இதில் எடியூரப்பா பதவி ஏற்பதற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் பாஜக ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் கடிதங்களை இன்று காலை 10 மணிக்குள் மே 15ம் தேதி ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதத்தின் நகலை தாக்கல் செய்ய வேண்டும். பதவியேற்பு வழக்கு இறுதித்தீர்ப்புக்கு உட்பட்டது என உத்தரவிட்டனர். இதைதொடர்ந்து கர்நாடகாவின் 23வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார்.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று காலை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஆளுநனருக்கு எழுதிய கடிதத்தின் நகலை எடியூரப்பா தாக்கல் செய்ய உள்ளார். எடியூரப்பாவின் முதல்வர் பதவி தப்புமா என்பது இன்றைய விசாரணையில் தெரியவரும்.