பாஜகவின் முதுபெரும் தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். வாஜ்பாய் மறைவையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் இன்று அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் நாராயணசாமி கூறும்போது" முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி மத்திய அரசை பின்பற்றி புதுச்சேரியில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. மேலும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் இன் உ (ஆக.17) அரசு விடுமுறை விடப்படுகிறது" என்றார்.
வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏற்கனவே 17ம் தேதி புதுச்சேரிக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் வாஜ்பாய் இறப்பையொட்டி, புதுச்சேரி மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.