நாட்டின் 76 - வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லி உட்பட நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுகிறார். இதனால் செங்கோட்டை முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதேபோல் பிரதமர் இல்லம், குடியரசுத்தலைவர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் சென்னை கோட்டையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியேற்ற உள்ள நிலையில், அங்கும் ஏராளமான போலீசார் பதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 9 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதே போன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விமானநிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சுமார் 40 ஆயிரம் காவலர்கள் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்நிலையில் சுதந்திர தினத்தை ஒட்டி சமூக வலைத்தள கணக்குகளில் முகப்பு படமாக (DP) தேசியக் கொடியை வைக்க பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அவரது டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளில் முகப்பு படமாக தேசியக் கொடி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.