அரசியலில் இருவேறு துருவங்களாக இருந்த காங்கிரஸின் ராகுல்காந்தியும், பா.ஜ.க.வின் சுப்பிரமணிய சுவாமியும் இப்பொழுது கூட்டணி அமைத்திருக்கின்றனர். அதுவும், பா.ஜ.க.விலுள்ள அமைச்சர் அருண்ஜெட்லியை கவிழ்ப்பதற்காக என்பது தான் வேடிக்கையே.!!
கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர் கிங் பிஷர், யுனைடெட் புருவெரீஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் என பல தொழில்களை நடத்தி வந்தவர், தொழிலின் அபிவிருத்திக்காக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் ரூ.9000 கோடி கடன்வாங்கி, அதனை திருப்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். கடன் விவகார வழக்குகள் சி.பி.ஐ.க்கு சென்ற நிலையில், இவரை தாயகம் கொண்டு வர சி.பி.ஐ. தரப்பில் லண்டனிலுள்ள வெஸ்டர் மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்குத் தொடர்பான நீதிமன்ற உத்தரவு வருகின்ற டிசம்பர் 10ம் தேதி வெளியாகும் என்ற நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த விஜய் மல்லையா, "இந்தியாவிலிருந்து தான் புறப்படும் போது நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை பார்த்துட்டு வந்தேன்.." என கூறிவைக்க, விவகாரம் பெரிதாகியுள்ளது.
இவ்வேளையில், காங்கிரஸின் ராகுல் காந்தியோ, "பொருளாதாரக் குற்றவாளி எப்படி மத்திய அமைச்சரை சந்திக்கலாம்..?" என கொளுத்திப் போட, அவருக்கு ஆதரவாக, "இது தான் தருணமென காத்திருந்த சுப்பிரமணியன் சுவாமியின் ஆதரவாளர்களோ, "மல்லையா வால் இந்தியாவை விட்டுத் தப்பி ஓடமுடியவில்லை. கடுமையான 'லுக் அவுட் நோடீஸ்' எல்லா விமான தளங்களிலும் கொடுக்கப்பட்டிருந்தது.
மல்லையா டெல்லிக்கு வந்து அந்த லுக் அவுட் நோடீசை மாற்றக் கூடிய அளவுக்கு பலமுள்ள ஒருவரைச் சந்தித்து 'பை' சொல்லிட்டுப் போனார். யார் அந்த லுக் அவுட் நோட்டீசைத் திருத்தியது?" சு.சாமி கேட்ட கேள்விக்கு மூணு மாதம் கழித்து இப்போ பதில் கிடைச்சிடுத்து. அருண்ஜேட்லி பதவி விலகுவாரா? மோடி அவரை டிஸ்மிஸ் பண்ணுவாரா?" என கேள்விக்கேட்டதோடு மட்டுமில்லாமல் சு.சுவாமி மூன்று மாதங்களுக்கு முன்னால் பதிவிட்ட டுவீட்டையும் இணைத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட, டெல்லி அரசியலில் பரப்பரப்புத் தொற்றியுள்ளது.