ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் ஹத்ராஸ் வருகையையொட்டி உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்திக்க உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு செல்ல ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஏற்கனவே முயன்றபோது அவர்கள் போலீஸாரால் தடுக்கப்பட்டதும், கைது செய்யப்பட்டதும் அம்மாநில ஆளும் கட்சி மற்றும் போலீஸார் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தின. இந்த சூழலில், இன்று மீண்டும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் ஹத்ராஸ் செல்லும் நிலையில் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் அன்ஸு அவஸ்தி இதுகுறித்து கூறுகையில், “மாநில தலைவர் அஜய் குமார் லாலுவின் வீட்டைச் சுற்றி போலீஸார் பாதுகாப்பில் உள்ளனர். அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார், யாரையும் உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் சேரக்கூடாது, பேரணியில் இணையக்கூடாது என்பதற்காக தடுக்கப்பட்டுள்ளார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.