இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப், "உலகின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்குகிறது. உலகில் பல பகுதிகளில் அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கர்கள் பணிபுரிகின்றனர். ஈரானை சேர்ந்த சுலைமானியை சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா கொன்றது. ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு எதிராக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். தலிபான்களுடன் விரைவில் உடன்பாடு எட்டப்படும் என நம்புகிறேன். ஆப்கானிஸ்தானில் 99% மக்கள் அமைதியையே விரும்புகின்றனர். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை என்னை விட யாரும் கூடுதலாக எடுத்ததில்லை. தெற்காசியாவின் அமைதி குறித்து பிரதமர் மோடியுடன் பேசினேன். அமெரிக்காவில் இந்தியர்கள் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்வார்கள் என நம்புகிறேன்.
இந்தியாவில் மத சுதந்திரம் சிறப்பாக இருப்பதாக பிரதமர் மோடி என்னிடம் கூறினார். சிஏஏ குறித்து பிரதமர் மோடியிடம் நான் எதுவும் பேசவில்லை, மக்களுக்கு அரசு நல்லதையே செய்திருக்கும் என நம்புகிறேன். மத சுதந்திரம் பற்றி பேசினேன். பல்வேறு மக்களிடம் பேசியதில் இருந்து மத சுதந்திரம் குறித்து எதிர்மறை கருத்துகள் வரவில்லை. மத சுதந்திரத்திற்காக இந்தியா கடுமையாக பாடுபட்டு வருகிறது. ஹெச் 1 பி விசா விவகாரம் குறித்தும் பிரதமர் மோடியிடம் பேசினேன்.
டெல்லியில் ஏற்பட்ட வன்முறை இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை. டெல்லியில் வன்முறை ஏற்பட்டதாக கேள்விப்பட்டேன்; ஆனால் அதுபற்றி பிரதமரிடம் பேசவில்லை. பாகிஸ்தான் குறித்தும் பிரதமர் மோடியிடம் பேசினேன். இந்தியா வலிமையான நாடு; பயங்கரவாதத்தை எதிர்க்கொள்ளும் திறன் அவர்களிடம் உள்ளது. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு இந்தியாவுக்கு உதவ தயார். அமைதியான மனிதரான மோடி, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்.
இந்தியா- பாகிஸ்தான் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமேரிக்கா தயார். இந்தியா- பாகிஸ்தான் இடையே நெருடலான பகுதியாக காஷ்மீர் உள்ளது." இவ்வாறு அதிபர் ட்ரம்ப் பேசினார்.