நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று காலை 7 மணியளவில் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் நாட்டின் 77வது சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். மேலும் செங்கோட்டையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினர், போலீசார் என 40 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு விருந்தினர்களாக விவசாயிகள், தொழிலாளர்கள் என ஆயிரத்து 800 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர் மோடி தற்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த உரையில், “இந்தியாவின் 140 கோடி மக்களும் எனது குடும்பத்தினர். இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக விளங்குகிறது. வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் புகுந்ததுடன் இல்லாமல், நமது வளங்களையும் கொள்ளையடித்தனர். தற்போது எடுத்த நடவடிக்கைகளின் தாக்கம் அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு இருக்கும். உலகிற்கே இந்தியா மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை, ஜனநாயகம், மக்கள் தொகை இவைதான் நமது சக்தியின் காரணம்; தற்போது நாம் மேற்கொண்டுள்ள பயணத்தில் தடுமாற்றமோ, பாதை விலகலோ கிடையாது.
இந்திய இளைஞர்கள்தான் இந்தியாவின் வளர்ச்சியை வழிநடத்திச் செல்கின்றனர். தேசத்தை மிக வலுவுடன் கட்டமைக்கும் பணிகளில்தான் நமது கவனம் இருந்து வருகிறது. இந்தியா தனது எதிர்காலத்தை தானே வடிவமைத்துக் கொள்ளும் திறனைத் தற்போது பெற்றுள்ளது. தொழில்நுட்ப புரட்சியில் இந்தியா பெரும் பங்காற்றி வருகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள உலகமே விரும்புகிறது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஒத்துழைப்புடன் இந்தியா வலுவான நிலையை நோக்கி நகர்கிறது. இந்தியா நவீனத்துவத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. கிராமங்களிலுள்ள விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, உலக அரங்கிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக நாம் உருவாகி இருக்கிறோம். உலகின் நிலைத்தன்மைக்கு இந்தியாதான் தற்போது காரணமாக இருக்கிறது. இந்தியா என்ற பயணத்தில் தொடர்ந்து நிலையாக இருக்க நிலையான அரசு தேவைப்படுகிறது. கடந்த 2014 மற்றும் 2019இல் வலுவான பெரும்பான்மை கொண்ட அரசை மக்கள் தேர்ந்தெடுத்தனர். பெரும்பான்மை அரசால் சீர்திருத்தங்களைச் செய்ய எனக்கு தைரியம் இருந்தது. நாட்டின் வளர்ச்சிக்கு உறுதியான அரசை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் ஆகிய தாரக மந்திரத்தை வைத்து இந்தியா செயல்பட்டு வருகிறது. மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததற்கு மாற்றங்களைக் கொண்டு வந்து கொடுத்துள்ளேன். இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை ஊழல் கட்டுப்படுத்திய நிலையில், அந்தத் தடையை நாங்கள் நீக்கியுள்ளோம்; ஊழல் என்ற தடையை நீக்கி, நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.