புதுச்சேரியில் டில்லி குடியரசு தின விழாவில் பதக்கங்கள் பெற்ற தேசிய மாணவர் படை வீரர்களுக்கு ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஜனவரி 26 டில்லியில் நடைபெற்ற இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் மொத்தம் 17 என்.சி.சி மாணவர் படைகள் பங்கேற்றன. அதில், புதுச்சேரி-தமிழகம்-அந்தமான் நிக்கோபர் இயக்குநரகத்தை சேர்ந்த என்.சி.சி கடற்படை, விமானப்படை, தரைப்படை மாணவர்கள் பொதுத்திறமை, தனி நடனம், குழு நடனம், கலாச்சார போட்டிகள் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளனர். பதக்கங்கள் மற்றும் கோப்பைகளோடு புதுச்சேரி திரும்பிய புதுச்சேரி-தமிழ்நாடு-அந்தமான் இயக்குநரகத்தை சேர்ந்த தேசிய மாணவர் படை (என்.சி.சி) மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரி-தமிழகம்-அந்தமான் இயக்குநரக துணை டைரக்டர் ஜெனரல் கமாண்டர் அடுல் குமார் ரஸ்தோகி, புதுச்சேரி குரூப் கமாண்டர் கர்னல் சோம்ராஜ் குலியா ஆகியோர் பங்கேற்றனர். குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையில் பங்கேற்று பதக்கம் மற்றும் கோப்பைகளை வென்ற என்.சி.சி மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். தொடர்ந்து குழு படம் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை பேசுகையில், "குடியரசு தின விழாவில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்து சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ள உங்கள் அனைவரையும் துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பெருமையான ஒன்று. உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பயிற்சி உங்களுக்கு தன்னம்பிக்கையையும் கலை, கலாச்சாரத்தின் மீதான ஆர்வத்தையும் தந்திருக்கிறது. முன்பெல்லாம் ராணுவம், காவல்துறை, என்.சி.சி போன்ற துறைகளில் பெண்கள் பங்கேற்பதில் தயக்கம் இருந்தது. பாரதி சொன்னதைப் போல நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு மிடுக்காக பெண்கள் வரும்போது, உண்மையிலேயே ஒரு பெண்ணாக பெருமை அடைகிறேன். அதற்காக அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல இன்னும் பல துறைகளில் அவர்கள் முன்னுக்கு வருவதற்கான உற்சாகத்தையும் ஒத்துழைப்பையும் ஊக்கத்தையும் தர வேண்டும்" என்று குறிப்பிட்டார்.