19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெற்று முடிந்தது. கடந்த செப். 23ம் தேதி துவங்கி அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆசியக் கண்டத்தில் உள்ள இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் கலந்து கொண்டன.
இந்த விளையாட்டில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களை வென்றது. அதேபோல், ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல் முறையாக இந்தியா 100 பதக்கங்களுக்கு மேல் வென்றது.
இந்நிலையில், நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (10ம் தேதி) சந்தித்தார். இந்தச் சந்திப்பில் அவர் பேசியதாவது; “நான் பெருமையடைகிறேன். ஆசிய விளையாட்டுகளில் நீங்கள் சிறப்பான பங்களிப்பை இந்தியாவுக்காக அளித்துள்ளீர்கள். நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். 140 கோடி இந்தியர்கள் சார்பாக நான் உங்களை வரவேற்கிறேன். உங்களின் உழைப்பாலும், முயற்சியாலும், சாதனையாலும் இந்தியா முழுவதும் கொண்டாட்ட மனநிலை ஏற்பட்டுள்ளது.
நம் நாட்டில் ஏராளமான திறமைசாலிகள் உள்ளனர். ஆனால், சில தடைகளால் அவர்களின் திறமை பதக்கங்களாக மாறாமல் உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் போதையில்லா இந்தியா என்ற செய்தியை பரப்ப வேண்டும்” என்றார்.