நிலவில் ஆய்வு செய்வதற்கான முன்னெடுப்புகளை உலக நாடுகள் பலவும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா சார்பில் சந்திரயான்-3 என்ற விண்கலம் ஏவப்பட இருந்தது. இதற்கானத் தயாரிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 இன்று விண்ணில் பாய்ந்தது.
இதற்கு முன்பாகவே 2008 ஆம் ஆண்டு சந்திரயான்-1, 2019-ல் சந்திரயான்-2 ஆகியவை விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது. அதில் கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவை ஆய்வு செய்ய இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 2 என்ற விண்கலம் நிலவின் சுற்றுப் பாதையைச் சென்றடைந்த போதிலும் தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் கருவி திட்டமிட்டபடி தரையிறங்காமல் வேகமாகத் தரையிறங்கியதால் வெடித்துச் சுக்குநூறாக உடைந்தது.
இந்த நிலையில் இஸ்ரோ மீண்டும் நிலவை ஆய்வு செய்ய ரூ. 615 கோடி மதிப்பில் சந்திரயான் 3 என்ற விண்கலத்தை வடிவமைத்துள்ளது. நிலவுக்குச் செல்லும் 'சந்திரயான் 3' விண்கலத்தைச் சுமந்தபடி, எல்.வி.எம் 3 - எம்4 ராக்கெட் இன்று பிற்பகல் 2.35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் பாய்ந்தது. ஆகஸ்ட் 23 அல்லது 24 ஆம் தேதிகளில் சந்திரயான் விண்கலத்தை நிலவில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், “இந்தியாவிற்கு வாழ்த்துக்கள். இதற்காக உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி. நிலவிற்கான பயணத்தை சந்திரயான் 3 தொடங்கியுள்ளது. அனைத்து கட்டங்களையும் கடந்து சந்திரயான் 3 நிலவில் தரையிறங்க வாழ்த்துகளைத் தெரிவிப்போம். புவி வட்டப் பாதையில் செலுத்தப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தின் இயக்கம் திருப்திகரமாக உள்ளது” என்றார்.
இவரைத் தொடர்ந்து பேசிய மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங், “தற்சார்பு இந்தியா திட்டத்தில் சந்திரயான் 3 உருவாக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்திரயான் 3 மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது; இந்தியாவே பெருமைப்படுகிறது. சமீபத்தில் பிரதமர் மோடி வானம் எல்லை இல்லை என்று பேசியிருந்தார். அதற்கு ஏற்றார்போல் சந்திரயான் 3 வானத்தைக் கிழித்துக் கொண்டு சென்றது; தனது பயணத்தைத் தொடங்கியது” என்றார்