உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியைச் சேர்ந்தவர் மோஹித் யாதவ். இவர், காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், இவருக்கும் ரிசர்வ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மோஹித் யாதவை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மோஹித் யாதவ் தனது மூத்த அதிகாரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பு ஒரு தேநீர் கடையை அமைத்து, தேநீர் விற்பனை செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மோஹித் யாதவ், “நான் காவல்துறையில் ஒரு இன்ஸ்பெக்டர். நான் அந்தத் துறையில் இருக்கிறேன். நான் எங்கு சென்றாலும், ஏதாவது ஒரு சம்பவம் உருவாக்கப்பட்டு, என் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்படுகிறது. என்னுடைய இடைநீக்க காலத்தில், நான் பாதி சம்பளத்தைக் கூட வாங்க மாட்டேன் என்று விசாரணை அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். நான் எனது சொந்தத் தொழிலைச் செய்வேன். டீ கடையை நடத்துவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் எனது வீட்டை நடத்துவேன்” என்று கூறினார்.