பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து சற்று காலதாமதமாக நண்பகல் 12 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராகக் கூட்டணி அமைப்பது குறித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பேசியுள்ளனர். இக்கூட்டத்தில் 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட 6 மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சியினரின் கூட்டம் குறித்து ஆளும் பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஜம்முவில் அரசு விழா ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “2024 தேசியத் தேர்தலுக்கு முன்னதாக பாட்னாவில் பாரதிய ஜனதா அல்லாத கட்சிகளின் கூட்டத்தை கூட்டியுள்ளனர். அதனால் ஒரு பயனும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராவார். மோடியின் சிறந்த முயற்சிகளால் லோக்சபாவில் உள்ள 543 தொகுதிகளில் 300க்கும் அதிகமான இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும், பாஜகவை தோற்கடிப்பதற்கான ஒற்றுமைக்கான முயற்சிகள் ஒருநாளும் எடுபடாது எனவும் கூறினார்” என்றார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஒடிஷாவில் பேசுகையில், “ இந்திரா காந்தியின் ஆட்சியில் நிதிஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று அவற்றையெல்லாம் அவர்கள் மறந்து, இந்திராகாந்தியின் பேரனுடன் கைகோர்த்துள்ளனர். ஒருபோதும் அவர்களின் கனவு பலிக்காது. மீண்டும் மோடி தலைமையிலான ஆட்சிதான் மத்தியில் அமையும்” என கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, ”எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்தை கொலை செய்த காங்கிரஸ் தலைமையில் அதனை அப்போது எதிர்த்த தலைவர்கள் ஒன்று சேர்வது கேலிக்கூத்தானது,. மோடியை எதிர்த்துப் போராட காங்கிரசால் மட்டும் முடியாது என்ற செய்தியை நாட்டிற்குச் சொல்லி இவர்கள் ஒன்று சேர்வது வேடிக்கையானது. பிரதமர் மோடியை காங்கிரஸால் மட்டும் தோற்கடிக்க முடியாது என்பதாலேயே பிற கட்சிகளின் உதவியை இவர்கள் நாடியுள்ளனர். இதை பகிரங்கப்படுத்தியதற்காகவே காங்கிரஸுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய ரவி சங்கர் பிரசாத், “ நிதிஷ் குமார், பாட்னாவில் வரும் 2024-ம் ஆண்டு தேர்தலுக்காக திருமண ஊர்வலம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் இந்த ஊர்வலத்தின் மாப்பிள்ளை (பிரதமர் வேட்பாளர்) யார்?. அங்கிருப்பவர்கள் அனைவரும் தங்களை பிரதமர் வேட்பாளராகவே கருதுகின்றனர்” என்றார்.