இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் லேசான மற்றும் மிதமான கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான திருத்தப்பட்ட நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு, மூன்று நாட்களுக்கு கடந்து 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தாலோ, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ, மருத்துவ உதவியை நாட வேண்டும். அறை காற்றில், ஒரு மணிநேரத்திற்குள் செய்யப்படும் மூன்று சோதனைகளில் இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 93-க்கும் கீழ் குறைந்தாலோ, சுவாச விகிதம் நிமிடத்திற்கு 24-ஐ தாண்டினாலோ மருத்துவ உதவியை நாட வேண்டும்.
மார்பில் தொடர்ந்து வலியோ அல்லது அழுத்தமோ இருந்தாலோ, மனக்குழப்பம், கடுமையான சோர்வு, தசைகளில் வலி ஆகியவை ஏற்பட்டாலோ மருத்துவ உதவியை நாட வேண்டும். மேலும் திருத்தப்பட நெறிமுறைகளின்படி, வீட்டு தனிமையில் இருப்போர், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காய்ச்சல் இல்லை என்றால், கரோனா உறுதியான ஏழுநாட்களுக்கு பிறகு வீட்டு தனிமையிலிருந்து வெளிவரலாம் என்றும், அவர்கள் மீண்டும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதில்லை எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.