மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரங் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனால், பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த மே மாதம் 3ம் தேதி ஒருங்கிணைந்த பழங்குடியின மாணவர் அமைப்பு அந்த மாநிலத்தில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் பலியாகினார்கள். மேலும், 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.
இதற்கிடையில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியினப் பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுவதிருந்தது.
இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளராக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் நெக்டர் சஞ்சன்பாம் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மணிப்பூர் உள்துறை இணைச் செயலர் விடுத்துள்ள அறிக்கையில், “மிகவும் சவாலான சூழ்நிலையில் துல்லியமான திட்டமிடல், முன்மாதிரியான துணிச்சல், தைரியமான நடவடிக்கையை மேற்கொண்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் நெக்டர் சஞ்சன்பாம் மூத்த காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர் இந்த பதவியில் இருப்பார்” எனக் கூறப்பட்டுள்ளது.
கர்னல் சஞ்சன்பாம், கடந்த 2015 ஆம் ஆண்டு மியான்மரில் இந்தியா நடத்திய ராணுவப் படையின் மிகவும் துல்லிய தாக்குதல் எனப்படும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வழி நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.