நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று விளக்கமளித்தார். இந்தநிலையில் பிபின் ராவத்துக்கும் விபத்தில் உயிரிழந்த மற்றவர்களுக்கும் அஞ்சலி செலுத்த எதிர்க்கட்சிகள் அவகாசம் கோரியதாகவும், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், "மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சரின் அறிக்கைக்குப் பிறகு, ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் பிறருக்கு அஞ்சலி செலுத்த ஒவ்வொரு எம்.பி.க்கும் 1 முதல் 2 நிமிடங்கள் அவகாசம் கேட்டோம். ஆனால் எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. இந்த அணுகுமுறையை நாங்கள் கண்டிக்கிறோம்" எனக் கூறியுள்ளார்.