நாட்டில் நிலவும் பொருளாதார மந்தநிலை குறித்து டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்து வருகிறார். அப்போது சர்வதேச நாடுகளை ஒப்பிடும் போது இந்திய பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் உள்ளது. உலகின் முன்னணி நாடுகளான அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளனர் என்றும், சர்வதேச பொருளாதார ஜிடிபி 3.2% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது என்றார்.
இருப்பினும் பொருளாதார சிக்கல்களை களைய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் ஜி.எஸ்.டி நடைமுறையில் உள்ள குறைபாடுகள் களையப்படும். அதேபோல் ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு துறையையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக பொறுப்புணர்வு திட்டத்தை செயல்படுத்தாத பெரு நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது.
நீண்ட கால, குறுகிய கால மூலதன ஆதாயங்கள் மீதான கூடுதல் வரியை நீக்குவதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெளிநாட்டு முதலீடுகள் மீதான கூடுதல் வரியை திரும்ப பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். அதனை தொடர்ந்து அக்டோபர் 1 ஆம் தேதி முதல் வருமான வரி உத்தரவுகள், சம்மன் உள்ளிட்ட அனைத்தும் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும் என தெரிவித்தார். இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறை எளிமையாக்கப்படும் என கூறினார்.