மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றியை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் அரசு அமைந்துள்ளது. இந்த அமைச்சரவையில் மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பு அமித்ஷாவிற்கும், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பொறுப்பு ராஜ்நாத் சிங்கிற்கும், மத்திய நிதி அமைச்சர் பொறுப்பு நிர்மலா சீதாராமனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17- ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான பணிகளில் மக்களவை மற்றும் மாநிலங்களவை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே போல் மத்திய அமைச்சர்களும் மக்களுக்கான திட்டங்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஜூலை - 5 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதற்கு முன் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய திட்டங்கள் குறித்து பிரதமர் மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை செய்கிறார். மேலும் நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளார்.
மத்திய பட்ஜெட் தயாரிப்பு குறித்து மக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள நிலையில், அனைத்து துறையை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். நேற்று விவசாய பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை செய்த அமைச்சர் விவசாயிகளுக்கு தேவையான அனைத்தையும் மத்திய அரசு செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் மத்திய நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாகூர் , நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்திரா, நிதித்துறை செயலாளர் சுபாஷ் கார்க், செலவின செயலாளர் கிரிஷ் சந்திர மர்மு, வருவாய் செயலாளர் அஜய் நாராயண பாண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர். வேளாண் துறையில் முதலீடுகளை பெருக்குதல், சூரிய சக்தியை வருமான வாய்ப்பாக விவசாயிகள் பயன்படுத்த அனுமதித்தல், நுண் நீர்ப்பாசனத்தில் முதலீட்டை அதிகரித்தல், வேளாண் பல்கலைக்கழகங்களில் காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட யோசனைகளை விவசாய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.