மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 15- வது நாளாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பஞ்சாப், ஹரியானா, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்த மத்திய அரசு, விவசாயிகளுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இருப்பினும் பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாததால், விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.
இந்த நிலையில், டெல்லியில் இன்று (10/12/2020) மாலை 04.00 மணிக்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அரசின் சார்பில் முன்வைக்கப்படும் கருத்து குறித்தும், செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கிறார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை விவசாயிகள் கைவிடாத நிலையில், மத்திய அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.