லாக்டவுனை முழுமையாக ஒரே நேரத்தில் தளர்த்தினால், ஊரடங்கை திடீரென அமல்படுத்தியது போன்ற தவறான முடிவாகவே அமையும் என மகாராஷ்ட்ர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நான்காம் கட்ட ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், நாளை உள்நாட்டு விமானச் சேவையைத் தொடங்குவதிலும், ரயில் சேவையை மீண்டும் தற்போது தொடங்குவதிலும் அதிருப்தியில் உள்ள மகாராஷ்ட்ர அரசு, மத்திய அரசின் இந்த முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, "கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த திடீரென லாக்டவுனை அறிவித்தது மத்திய அரசின் தவறான முடிவு. இப்போது அதை முழுமையாக ஒரே நேரத்தில் நீக்கினால் அதுவும் அதற்கு இணையான தவறுதான்.
அவ்வாறு செய்ய முடியாது. அப்படி செய்தால் மக்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். மேலும், பருவமழை வேறு வருவதால், லாக்டவுனை நீக்குவதில் இன்னும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். மத்திய அரசு சிறிய உதவி செய்திருக்கிறது. அதாவது, இந்த விவகாரத்தில் எந்தவிதமான அரசியல் சேற்றை வாரி இறைக்காமல் உதவி செய்துள்ளது" என தெரிவித்துள்ளார்.