உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்ட நிலையிலும், காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் ஓய்வதாக இல்லை. என்னதான் நடக்கிறது உத்தரகாண்ட் மாநில தேர்தல் களத்தில் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி 14- ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் உட்கட்சி பூசல் ஓய்வதாக இல்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரகாண்ட் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் முன்னாள் முதலமைச்சர் ஹரீஷ் ராவத்திற்கும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கணேஷ் கொடியாலுக்கும் இடையே மோதல் எழுந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலையிட வேண்டியிருந்தது.
அடுத்த பிரச்சனையாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிஷோர் உபாத்தியாயாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் காங்கிரஸ் தலைமை நீக்கியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு மற்றும் உயர்மட்ட குழு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்து வரும் இவர், கட்சி விரோத செயலிகளில் ஈடுபட்டதாகக் கூறி நீக்கப்பட்டார்.
தேர்தல் பரப்புரை சூடுபிடித்திருக்கும் நேரத்தில் கிஷோர் உபாத்தியாயாவின் நீக்கம், உத்தரகாண்ட் மாநில அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இவருடைய ஆதரவாளர்கள் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகலாம் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில், பிரச்சனைகளை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர காங்கிரஸ் கட்சித் தலைமை முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான மோகன் பிரகாஷை, உத்தரகாண்ட் மாநில தேர்தல் மேற்பார்வையாளராக அக்கட்சி நியமித்தது. தற்போதுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கட்சி தாவல்களைத் தடுக்க முடியும் என்று அக்கட்சி நம்புகிறது.
இன்னும் ஒரு வாரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ள நிலையில், வரும் வாரங்களில் உட்கட்சிப் பூசல் வெடிக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.