இந்தியா மட்டுமல்ல உலகமே எதிர்பார்க்கப்பட்ட மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று (04-06-24) வெளியானது. அதில், மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க வெறும் 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணி கட்சிகளில் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை உள்ளது.
இதற்கிடையில், நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெளியான முடிவுகளில் 13 முக்கிய மத்திய அமைச்சர்கள், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் படுதோல்வி அடைந்துள்ளனர். அந்த வகையில், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த ஸ்மிருதி இராணி உத்தரப் பிரதேசம், அமேதி தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்டார். அவருக்கு எதிராகக் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிஷோரி லால் போட்டியிட்டார். இந்த தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லாலிடம் 1,67,196 வாக்குகள் ஸ்மிருதி இராணி தோல்வியடைந்தார். கடந்த 2019ஆம் மக்களவைத் தேர்தலில், ராகுல் காந்தியைத் தோற்கடித்த ஸ்மிருதி இராணி பலரது கவனத்தைப் பெற்றார்.
அதே போல், உள்துறை அமைச்சகத்தில் இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த பா.ஜ.கவைச் சேர்ந்த அஜய் மிஸ்ரா, உத்தரப் பிரதேசம் மாநிலம் கோரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் கோரி தொகுதியில் வெற்றி பெற்ற அஜய் மிஸ்ரா, சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் உட்சர்ஷ் வர்மாவிடம் 34,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஜார்க்கண்ட் பா.ஜ.க முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வந்த அர்ஜுன் முண்டா, ஜார்க்கண்டில் காங்கிரஸ் வேட்பாளர் கலி சரண் முண்டாவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூரிடம் தோல்வியடைந்தார். அதே போல், மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அருப் சக்ரவர்த்தியிடம் 32,778 வாக்குகள் வித்தியாசத்தில் மத்திய கல்வித்துறை இணையமைச்சராக இருந்த சுபாஸ் சர்க்கார் தோற்கடிக்கப்பட்டார்.
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராக இருந்த எல்.முருகன், தமிழகத்தின் நீலகிரியில் தி.மு.கவின் ஏ.ராஜாவிடம் 2,40,585 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இவர்கள் உள்ளிட்ட 13 மத்திய அமைச்சர்கள் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களிடம் படுதோல்வியடைந்தது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.