சிவப்புத்துண்டைக் காட்டி வேகமாக வந்துகொண்டிருந்த ரயிலை நிறுத்தி மிகப்பெரிய விபத்தில் இருந்து தடுத்திருக்கின்றனர் ரயில்வே ஊழியர்கள்.
டெல்லியில் உள்ள திலக் மற்றும் யமுனா பாலத்திற்கு இடைப்பட்ட பகுதியிலான ரயில் தண்டவாளத்தை பிரியாஸ்வாமி (60) மற்றும் ராம் நிவாஸ் (55) ஆகிய இருவர் மேற்பார்வையிட்டுள்ளனர். அப்போது, தண்டவாளத்தில் ஆறு இன்ச் நீளமுள்ள விரிசல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதேசமயம், தூரத்தில் ரயில் வருவதை சைரன் ஒலியின் மூலம் உணர்ந்த இவ்விருவரும் வேறுவழியின்றி ரயிலை நோக்கி, தங்களது சிவப்புத் துண்டை உயர்த்திக் காட்டியபடியே ஓடியுள்ளனர். இதைக் கண்ட ரயில் எஞ்சின் ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தியதில் மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டது. ஷிவ் கங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஏராளமான பயணிகள் எந்தவித உயிர்ச்சேதமும் இன்றி தப்பினர்.
இவ்விருவரும் இதற்குமுன்பும் இதுமாதிரியான விபத்தைத் தடுத்துள்ளனர். ஆனால், அப்போது அவர்கள் கையில் செல்போன் இருந்துள்ளது. இம்முறை செல்போன் இல்லாததால், துண்டைக் காட்டி ரயிலை நிறுத்தியுள்ளனர். தங்களது உயிரைப் பற்றி கவலைப்படாமல் ரயிலை நோக்கி ஓடி, பலரின் உயிரைக் காத்த இவ்விருவருக்கும் சன்மானம் வழங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.