இன்று இந்தி தினத்தை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சைக்குரிய வகையில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
அமித்ஷா ட்விட்டரில், “இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு, ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும், இது உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு, இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்” என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தியாவை ஆளும் பாஜக அரசு இந்தியை மற்ற மொழி பேசும் மாநிலங்களில் திணித்து வருகிறது என்று பலரும் குற்றச்சாட்டு வைக்கும் நிலையில் அமித்ஷா இந்தி தினத்தையொட்டி இவ்வாறு ட்வீட் செய்துள்ளார். இவரின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் உலக அளவில் 2ஆம் இடத்தையும் இந்திய அளவில் முதலிடத்திலும் உள்ளது. அமித்ஷாவின் இந்தி குறித்த கருத்தையொட்டி ஹேஷ்டேக் ட்ரெண்டாவது குறிப்பிடத்தக்கது.