![Tributes to those who train accident in Puducherry](http://image.nakkheeran.in/cdn/farfuture/NvdaeMlXhXyvHWQ-s99l3DYXXp1eiLX7iQV2PkmDong/1685792217/sites/default/files/inline-images/1002_70.jpg)
ஒடிசா இரயில் விபத்தையடுத்து புதுச்சேரி தி.மு.க சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைஞர் நூற்றாண்டு விழாக்கள் ரத்து செய்யப்பட்டு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகிய 3 ரயில்கள் ஒடிசாவில் பயங்கர விபத்திற்குள்ளாகி 250க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளது நாட்டையே உலுக்கி நாட்டு மக்கள் அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. மனித உயிர்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ள இந்த படுமோசமான விபத்தில் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இத்தகைய சோகமான சூழ்நிலையில், தன் வாழ்நாள் முழுவதும் ஏழை எளியவர்களுக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், மனித நேயத்திற்காகவும் உரக்கக் குரல் எழுப்பி பாடுபட்ட கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை நடத்துவது சரியல்ல என்று தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதோடு, இன்று நடைபெறும் நூற்றாண்டு தொடக்க விழாவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில் புதுச்சேரி மாநில தி.மு.க சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊர்வலம், புதுச்சேரி மாவட்டத்தில் 23 தொகுதிகளில் உள்ள 736 கிளைக் கழகங்கள் தோறும் கலைஞர் திருவுருவப் படம் வைத்து இனிப்பு வழங்கியும் கழக கொடியேற்றியும் நலத்திட்டம் வழங்கும் விழா என நூற்றாண்டு தொடக்க விழா முழுவதையும் ரத்து செய்வதாக தி.மு.க மாநில அமைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான இரா.சிவா எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்திருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்த அனைத்து தொகுதி தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பேரறிஞர் அண்ணா சிலை அருகில் ஒன்று கூடி மாநில அமைப்பாளர் இரா.சிவா தலைமையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் திருவுருவச் சிலைக்கு மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து மாநில திமுக சார்பில் பயங்கரமான இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்.பி.சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், சிபிஐ மாநில செயலாளர் சலீம், சிபிஎம் மாநில செயலாளர் ராஜாங்கம், மதிமுக செயலாளர் கபிரியேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதன்மைச் செயலாளர் பொழிலன், ஏஐடியுசி மாநில செயலாளர் சேது செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.