கரோனா நோய்த்தொற்று காரணமாக, பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் சுமார் ஒரு மாதமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (06/02/2022) காலை 08.12 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் பா.ஜ.க. ரத்து செய்துள்ளது. அதேபோல், பிரதமர் நரேந்திர மோடி, இன்று காணொளி மூலம் மேற்கொள்ளவிருந்த கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையை ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து மும்பையில் உள்ள வீட்டிற்கு லதா மங்கேஷ்கர் உடல் கொண்டு வரப்பட்டது. சச்சின் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள், திரையுலக பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் லதா மங்கேஷ்கர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் குவிந்து வருவதால் மும்பையில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அஞ்சலிக்கு பிறகு லதா மங்கேஷ்கர் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, இன்று (06/02/2022) மாலை 06.30 மணிக்கு மும்பை சிவாஜி பார்க் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சரின் மகனும், அமைச்சருமான ஆதித்யா தாக்கரே மேற்பார்வையில் நடைபெற்று வருவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.