நாடு முழுவதும் ப்ளூ காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதோடு கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வந்த நிலையில் அதன் விளைவாக மாநில அரசுகளுக்கு கடிதங்கள் வாயிலாக முன்னெச்சரிக்கையோடு நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். நேற்று புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
தமிழகத்தின் இன்று மட்டும் தூத்துக்குடி, திருப்பூர் என இரு இடங்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3038 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21,179 ஆக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தனது வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அடுத்த சில நாட்கள் வீட்டில் இருந்தே பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.