மலைக்குன்றின் மீது தேன் எடுக்கச் சென்ற பொழுது குன்றின் பாறைக்கு இடையே கிடைத்த பழங்கால தங்க நாணயங்களைக் கண்டெடுத்த இளைஞர்கள் அதை விற்று கார், ஆட்டோ எனப் பல பொருட்களை வாங்கி செலவு செய்த சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்துள்ள சிட்டேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மலைக் குன்றின் மீது தேன் சேகரிக்கச் சென்றுள்ளனர். அப்பொழுது மலைக் குன்று ஒன்றின் பாறைக்கு இடையில் பழங்கால பித்தளை சொம்பு ஒன்று இருந்துள்ளது. உடனே அந்த சொம்பை உடைத்து பார்த்த பொழுது அதில் பழங்கால நாணயங்கள் இருந்துள்ளது. நாணயங்கள் அனைத்தும் தங்கம் என்பதை உறுதிசெய்த அந்த இளைஞர்கள் அதனை விற்று கார், ஆட்டோ உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தங்க நாணயத்தை இளைஞர்கள் உடைத்து எடுத்தபோது உடனிருந்த இருவருக்கு பங்கு தராமல் மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர். விரட்டப்பட்ட இரண்டு பேர் மீண்டும் மீண்டும் அந்த இளைஞர்களிடம் தங்களுக்கும் பங்கு வேண்டும் எனக் கேட்டு வந்துள்ளனர். தொடர்ந்து பங்கு தர மறுத்ததால் இது குறித்து இரண்டு பேரும் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் அடிப்படையில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 14 லட்சம் ரூபாய் ரொக்க பணம், கார், ஆட்டோ மற்றும் விற்றது போக மீதம் உள்ள பழங்கால தங்க நாணயங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.