நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.
மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடவுள்ளது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.
பெங்களூர் வடக்கு உள்பட 14 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பெங்களூர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் ஷோபா போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஷோபா, தனது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தின் போது, கார் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அமைச்சர் ஷோபா, நேற்று (08-04-24) காலை வழக்கம்போல், தனது காரில் தேர்தல் பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்றார். அவரது கார், கே.ஆர்.புரம் பகுதியில் உள்ள கோவில் அருகே சென்று போது, ஷோபாவின் கார் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி, தன்பக்கம் இருந்த கார் கதவை திடீரென திறந்துள்ளார். அப்போது, மத்திய அமைச்சரின் காருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர், மத்திய அமைச்சர் காரின் கதவி மீது மோதினார். இதில், இருசக்கர வாகனத்தில் இருந்த அவர் சாலையிம் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
அந்த சமயத்தில் பின்னால் வேகமாக வந்த தனியார் பேருந்து, கீழே விழுந்த அவர் மீது ஏறி இறங்கியது. இதில், பலத்த காயமடைந்து அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், விபத்தில் பலியானவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (55), என்பதும், பா.ஜ.க கட்சியின் தீவிர தொண்டரான பிரகாஷ், தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பதும் தெரியவந்தது. மத்திய அமைச்சர் ஷோபாவின் கார் கதவை திடீரென திறந்ததால், பா.ஜ.க தொண்டர் ஒருவர் விபத்தில் சிக்கிய பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.