Skip to main content

மதுக்கடை ஊழியர்கள் 15 நாட்களுக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.. புதுச்சேரி காவல்துறை உத்தரவு..! 

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

Liquor store employees must be vaccinated within 15 days .. Puducherry Police order ..!


புதுச்சேரியில் கரோனா இரண்டாவது அலை பரவல் கடந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து, தினசரி 2,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த ஒன்றரை மாதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக நோய்த் தொற்று ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது. அதையடுத்து நேற்றுமுதல் (08.06.2021) 14ஆம் தேதி நள்ளிரவுவரை புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் 5 மணிவரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் கடைகள் முழுநேரமாக இயங்கின. இதேபோல்  தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் காலை 9 மணிமுதல் மாலை 6 மணிவரை இயங்கின. காய்கறி, பழக்கடைகளில் காலை 5 மணிமுதல் மாலை 5 மணிவரை வர்த்தகம் நடைபெற்றது. உணவகங்கள், தேனீர் மற்றும் ஜூஸ் கடைகள் மாலை 5 மணிவரை செயல்பட்ட நிலையில், அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. 

 

அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து (பேருந்து, கார், ஆட்டோ) மாலை 5 மணிவரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் காலை 5 மணிமுதல் 9 மணிவரை பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் நடைபயிற்சி செய்தனர்.

 

இதனிடையே சில்லரை மதுக்கடைகள் மற்றும் சாராயக்கடைகளும் நேற்றுமுதல் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை இயங்க அனுமதிக்கப்பட்டதையடுத்து, மதுபானக் கடைகள் அனைத்தும் 42 நாட்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டன. இதனால் புதுச்சேரி மட்டுமின்றி அருகில் உள்ள தமிழ்நாட்டு பகுதிகளைச் சேர்ந்த மது அருந்துவோரும் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று தங்களுக்குத் தேவையான மதுபானங்களை வாங்கிச் சென்றனர். முகக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படுகிறது. அதேபோல் மதுக்கடை ஊழியர்கள், மது வாங்க வருபவர்களை சானிடைசர் மூலம் கைகளைச் சுத்தம் செய்து, வெப்ப பரிசோதனையும் மேற்கொண்டு கடைக்குள் அனுமதிக்கின்றனர். அதேபோல் அனைத்து மதுபானக்கடைகளிலும் கரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மதுக்கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் 15 நாட்களுக்குள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமெனவும் கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்