வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதும், தினமும் நாடாளுமன்றத்தை நோக்கி ட்ராக்டர் பேரணி நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் நாடாளுமன்றத்தில் முறைப்படி வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்தார்.
இந்தநிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கிராந்திகாரி கிசான் யூனியன் என்ற விவசாய சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால் சிங், தங்களது போராட்டம் தொடரும் என்றும், பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தர்ஷன் பால் சிங், "நவம்பர் 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் எங்கள் நிகழ்ச்சிகள் வழக்கம் போல் நடைபெறும். 22 ஆம் தேதி லக்னோ பேரணி நடைபெறும். 26 ஆம் தேதி, போராட்டம் தொடங்கி ஒருவருடம் நிறைவடைவதை குறிக்கும் வகையில் நாடு முழுவதும் கூட்டம் நடைபெறும். 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி ட்ராக்டர் பேரணி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், "வேளாண் சட்டங்களை தவிர குறைந்தபட்ச ஆதார விலை, எங்களுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெறுவது, மின்சார சட்ட திருத்த மசோதா, காற்று தர மேலாண்மை ஆணைய அவசர சட்டம் ஆகியவற்றை திரும்ப பெறுவது, இறந்த எங்களின் நண்பர்களுக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்குவது ஆகிய பிரச்சனைகள் நிலுவையில் உள்ளன. இந்த பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் என நம்புகிறேன்" என கூறியுள்ளார்.