உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றார்.
அவர் முதல்வராக அங்கு பொறுப்பேற்றதில் இருந்து எங்கும் காவி, எதிலும் காவி என்ற நிலையை உருவாக்கி வருகிறார். எப்போதும் காவி உடையில் சாமியாரைப் போல் தோற்றமளிக்கும் அவர், தான் கலந்துகொள்ளும் விழாக்களில் காவி நிறத்தையே அதிகம் முன்னிறுத்தினார். அதன்படி, பள்ளிப் பேருந்துகள், பறக்கவிடப்பட்ட பலூன்கள் என அனைத்திலும் காவியே இருந்தது.
அரசு தயார் செய்த ஆண்டறிக்கைகள், விழா மேடைகள், இருக்கைகள் (யோகி இருக்கை மட்டும்), ஹட்ச் அலுவலக மதில் சுவர், காவல்நிலையம், லால் பகதூர் சாஸ்திரி பவன் என அவரது ஆட்சியில் கடந்த 80 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு, எல்லா இடங்களையும் காவிமயமாக்கினார். அவர் அதையே விரும்புகிறார் என்பதை அறிந்த அதிகாரிகள், வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் வீட்டிற்கு யோகி சென்றபோது கூட காவித்துண்டுகளை கொண்டு அலங்கரித்தனர்.
தற்போது, புதிதிலும் புதிதாக சுங்கச்சாவடியும் காவி நிறத்தைப் பெற்றிருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் முஷாஃபர்பூர் - ஷாஜகான்பூர் இடையில் உள்ள நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ள சுங்கச்சாவடி தற்போது காவி நிறத்தால் பூசப்பட்டுள்ளது.