
500 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிக புழக்கத்தில் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மறைமுக அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இது குறித்து இன்டர்நெல் கம்யூனிகேஷன் மூலமாக பல்வேறு நிதி அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் கொடுத்திருப்பதாக தெரிகிறது. நிதி புலனாய்வு; வருவாய் புலனாய்வு; சிபிஐ; என்ஐஏ; பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளுக்கும் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இன்டர்னல் கம்யூனிகேஷன் மூலமாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக புழக்கத்தில் உள்ள அந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் நடைமுறையில் இருக்கும் உண்மையான ரூபாய் நோட்டுகள் போல அச்சு அசலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிண்டிங், டெக்ச்சர், தரம், எழுத்துக்கள் என இவை அனைத்தும் உண்மையான நோட்டுகள் போலவே இருப்பதால் கள்ள நோட்டுகளை கண்டறிவது சவாலான மற்றும் சிக்கலான ஒன்றாக இருக்குமாம். இதில் மிகவும் குறிப்பிடத்தகுந்த வகையில் 500 ரூபாய் கள்ள நோட்டுக்களில் பிழை ஒன்று இருப்பதும், அந்த பிழையை கண்டறிவதன் மூலம் கள்ள நோட்டுகளை கண்டறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூபாய் நோட்டுகளில் எழுதப்பட்டுள்ள ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) என்ற வாக்கியத்தில் இருக்கக்கூடிய ஆங்கில எழுத்தான E என்ற எழுத்துக்கு பதில் தவறாக A என்ற எழுத்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சிறிய பிழையை வைத்து அவை போலியான 500 ரூபாய் நோட்டுகள் என்பதை கண்டறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் பொழுது கண்டிப்பாக இதை கண்டறிவது முக்கியம் எனவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.