
சில தினங்களுக்கு முன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதிய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தை ஒரு பக்கமும் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களை மறுபக்கமும் அச்சடிக்க வேண்டும். தெய்வங்களின் படங்கள் ரூபாய் நோட்டுகளில் இருப்பது நாடு செழிக்க உதவும். விநாயகர் மற்றும் லட்சுமி படங்களை ரூபாய் நோட்டுகளில் கொண்டு வந்தால் ஒட்டு மொத்த நாடும் அதனால் ஆசிகளைப் பெறும். கடவுள் ஆசி இல்லை என்றால் நம் முயற்சிக்கு சில சமயங்களில் பலன் இருக்காது. இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை.
இந்தோனேசியாவில் இதைச் செய்துள்ளார்கள். அவர்களின் ரூபாய் நோட்டுகளில் விநாயகரின் உருவம் உள்ளது. நான் இது குறித்து பிரதமர் மோடிக்கு நாளை அல்லது நாளை மறுநாள் கடிதம் எழுத உள்ளேன்” எனக் கூறினார்.
இந்நிலையில் தற்போது பிரதமர் மோடிக்கும் இது குறித்து கடிதம் ஒன்றினையும் எழுதியுள்ளார். அதில், “நாட்டின் 130 கோடி மக்கள், இந்திய நாணயத்தில் காந்திஜி ஒருபுறமும் ஸ்ரீ கணேஷ்ஜி மற்றும் லட்சுமிஜியின் படம் மறுபுறமும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
இன்று நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் வளரும் மற்றும் ஏழை நாடுகளில் இந்தியா கணக்கிடப்படுகிறது. இன்றும் நம் நாட்டில் எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள். ஏன் ?
ஒருபுறம், நாட்டு மக்களாகிய நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும், மறுபுறம் நமது முயற்சிகள் பலனளிக்க இறைவனின் ஆசீர்வாதமும் தேவை.
சரியான கொள்கை, கடின உழைப்பு மற்றும் கடவுளின் ஆசீர்வாதம் இவைகளின் சங்கமத்தின் மூலம் மட்டுமே நாட்டை முன்னேற்றும்.
நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைப் பகிரங்கமாக கோரினேன். அப்போதிலிருந்து, இந்த பிரச்சனைக்குப் பொதுமக்களிடமிருந்து மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. இது குறித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகம் உள்ளது. இதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.