Skip to main content

“இன்னல் விளைவிப்பதும் பாஜக, இன்னல் வேண்டாம் என பரிந்துரைப்பதும் பாஜக” - சு.வெங்கடேசன் 

Published on 21/04/2025 | Edited on 21/04/2025

 

Su. Venkatesan opinion on Hindi being compulsory in Maharashtra

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை, தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று கூறி தமிழக அரசியல் தலைவர்கள் அந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். மேலும், மத்திய பா.ஜ.க அரசு மும்மொழி கல்விக் கொள்கை என்று கூறி மறைமுகமாக இந்தியை தமிழ்நாட்டிற்குள் திணிக்க முயற்சி செய்கிறது என்று தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு குரல் வந்து கொண்டே இருக்கிறது. 

அதே சமயம் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் ஏதேனும் மூன்றாவது மொழியை கற்றுக்கொண்டால் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக் கூடும் என்று பா.ஜ.கவினர் கூறி புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான், கல்வி தொடர்பான நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டை கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும் இடையே மொழி தொடர்பான மோதல் போக்கு உருவாகி வருகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறி வருகிறது. 

இந்த சூழ்நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு கடந்த 18ஆம் தேதி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம், 2025-2026 கல்வியாண்டில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5ஆம் வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே 1ஆம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை ஆங்கிலம், மராத்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை மூலம் மூன்றாவது மொழியாக தற்போது இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

மராத்தி அதிகம் பேசும் மகாராஷ்டிராவில், இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதே சமயம் முக்கிய எதிர்க்கட்சியான உத்தவ் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்தி திணிப்பிற்காக கடும் எதிர்ப்பை தெரிவித்தார். இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில், எதிரும் புதிரும் இருந்தாக உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இணைந்து செயல்படுவதாக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “இந்தித் திணிப்புக்கு எதிராக மகாராஷ்டிரா மொழி ஆலோசனைக் குழு பாஜக ஆளும் மாநிலம். அரசே அமைத்த ஆணையம். ‘துவக்க கல்வியில் தாய் மொழியே முக்கியம். இனியும் மகாராஷ்டிரா மொழி பண்பாட்டு தளங்களில் இன்னல் வேண்டாம்’ என பரிந்துரை. இன்னல் விளைவிப்பதும் பாஜக. இன்னல் வேண்டாம் என பரிந்துரைப்பதும் பாஜக. அது தான் பாஜகவின் ஏமாற்று அரசியல்” என்று கடுமையாக சாடியுள்ளார். 

சார்ந்த செய்திகள்