நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் 9 வது முறையாக தேசியக் கோடியை பிரதமர் மோடி ஏற்றிவைத்தார். முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு டெல்லி செங்கோட்டைக்கு வந்த அவருக்கு முப்படை அணிவிப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட பிரதமர், தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இன்று பிரதமர் மோடி நிகழ்த்தக்கூடிய உரையில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கான முன்னோடி திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வருடம் சிறப்பு அழைப்பாளர்களாக அங்கன்வாடி பணியாளர்கள், தெருவோர வியாபாரிகள், முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள், பிணவறையில் பணி செய்யக்கூடிய பணியாளர்கள் உள்ளிட்ட சமுதாயத்தில் அதிகம் கவனிக்கப்படாதவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்.
தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, ''சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை நினைவுகூறும் வகையில் வணக்கம் செலுத்தும் நேரம் இது. ஜவஹர்லால் நேரு, மஹாத்மா காந்தி, சர்தார் பட்டேல், சாவர்க்கர், அம்பேத்கர், பாரதியார், வேலு நாச்சியார், விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர் என பலரின் பங்களிப்புகள் உள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் இந்திய பெண்கள் தங்களது சக்தியை உலகிற்கு எடுத்துக்காட்டினர். ஒவ்வொருவரின் தியாகங்களும் போற்றப்பட வேண்டும். அவர்களது கனவுகள் நிறைவேற்றப்பட வேண்டும். பழங்குடியினத்தைச் சேர்ந்த பலரும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தனர். வேகமாக வளர்ச்சி அடைய ஒவ்வொரு இந்தியனும் அடியெடுத்து வைக்கும் காலம் இது. உலகின் ஒவ்வொரு பகுதிகளும் ஏதாவது ஒரு வகையில் இந்தியாவின் தேசியக்கொடி பட்டொளி வீசி பறக்கிறது.
போராட்டத்தில் பங்கெடுத்தும் வெளியே தெரியாமல் புறக்கணிக்கப்பட்ட அனைவரையும் நாம் நினைவு கூறுவோம். நாடு இரண்டாக பிரிக்கப்பட்டபோது மக்கள் கடும் இன்னல்களை சகித்துக் கொண்டனர். சுதந்திரம் பெற்றுள்ள இந்த 75 ஆண்டுகளில் நாடு பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்து இருக்கிறது. ஆனால் ஆருடம் அத்தனையையும் தகர்த்து தேசிய கொடி பறக்கிறது. உலகில் ஜனநாயகம் பிறந்தது இந்தியாவில் தான் என்பதை நாம் உலகிற்கு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். பஞ்சம், போர், பயங்கரவாதம் என அனைத்தையும் தாண்டி இந்திய ஜனநாயக பாதையில் முன்னேறுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் போராட்டத்தால் பிரிட்டிஷ் அரசின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது. இந்தியாவின் பன்முக தன்மையே அதன் வலிமையாகும். நம் நாடு ஜனநாயகத்தின் வீடு. ஒவ்வொரு இல்லத்திலும் தேசியக் கொடியை ஏற்றி மக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த ஒருங்கிணைந்த உணர்வு தான் இந்தியாவின் பலம். புதிய இந்தியாவிற்கு அதுதான் அடிப்படை. நிலையான அரசு, சிறப்பான கொள்கை மூலம் விரைவான வளர்ச்சி என உலகிற்கு எடுத்துக்காட்டி உள்ளோம். அனைவருக்கும் நல்லாட்சி, அனைவருக்கும் வளர்ச்சி என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். அடுத்த 25 ஆண்டுகள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமானது. 2047க்குள் சுதந்திர போராட்ட வீரர்கள் கனவுகளை நனவாக்க வேண்டும்'' என்றார்.