நிவர் புயல், தமிழகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கடந்து சென்றுவிட்ட நிலையில், பக்கத்து மாநிலமான ஆந்திராவில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அங்கு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூவரை மீட்கும்பணி தொடர்கிறது.
ரேணிகுண்டா அருகிலுள்ள ஏர்பேடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று விவசாயிகள், தங்களது தோட்டத்தில் உள்ள மின் மோட்டார்களைப் பத்திரப்படுத்துவதற்காக, ஆற்றைக் கடந்து சென்றுள்ளனர். அப்போது, ஆற்றில் பெருவெள்ளம் வர, அவர்கள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து உறவினர்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்தில் தீயணைப்பு படையினரும், போலீஸாரும் முகாமிட்டு, மூவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒருவர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டார். அவரது நிலை என்னவென்று தெரியவில்லை. மற்ற இருவர், ஆற்றின் நடுவில் இருந்த மரங்களைப் பிடித்துக் கொண்டு, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தவித்து வருகின்றனர். அவர்களது உறவினர்கள், ஆற்றின் கரையோரம் பரிதவிப்போடு காத்திருக்கின்றனர்.
நிவர் புயலினால், சித்தூர் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. அதனால், அங்குள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருநாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அம்மாவட்ட கலெக்டர் பரத் குப்தா, மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதோடு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், முகாமிற்கு உடனடியாகச் சென்று தங்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.