புதுச்சேரி மேற்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்தி சேகர் நேற்று (08/07/2022) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அகற்றி அ.தி.மு.க. ஆட்சியை கொண்டு வர வேண்டும் என மக்கள் மனதில் எண்ணம் உதித்துள்ளது. இந்நிலையில் சில விஷ கிருமிகள் ஒற்றைத் தலைமை என்ற கோஷத்தை எழுப்பி அ.தி.மு.க.வுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளனர்.
கடந்த மாதம் ஜூன் 23-ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் உறுப்பினர்கள் நடந்த விதம் மனவேதனையையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பொதுக்குழு உறுப்பினர்களிடையே தேர்தல் நடத்தினால் 2 பேருமே சமமாக வெற்றி பெறுவார்கள். கட்சியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சுக்கு 80 சதவீத ஆதரவும், வாக்காளர்களிடையே 95 சதவீத ஆதரவும் உள்ளது.
விதிகளுக்கு முரணாக வரும் ஜூலை 11-ஆம் தேதி பொதுக்குழுவை கூட்ட முயற்சிக்கின்றனர். அ.தி.மு.க. என்ற ஆலமரத்தை சரிக்க முயற்சிக்கின்றனர். பொதுக்குழுவுக்கு அனுப்பியுள்ள அழைப்பு கடிதத்தில் யாருடைய கையெழுத்தும் இடம்பெறவில்லை. இதுவே அ.தி.மு.க.வுக்கு பெரும் இழுக்கு. லெட்டர்பேடு அரசியல் கட்சிகளைப் போல நடந்து கொள்கின்றனர்.
பொதுக்குழுவை இரண்டு தலைவர்களும் இணைந்து ஒத்திவைக்க வேண்டும். தொண்டர்களை பொறுத்தவரை கட்சிக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவரும் தேவை. கடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு மாவட்ட அளவில் அ.தி.மு.கவினரின் மனநிலை மாறியுள்ளது. இதனால் தொண்டர்கள், நிர்வாகிகளின் எண்ணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.
ஜூலை 11- ஆம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பில்லை. அப்படியே நடந்தாலும் பொதுச்செயலாளர் பதவியேற்க வாய்ப்பும் இல்லை. நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு ஓ.பி.எஸ்.ஸுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
புதுச்சேரியில் செல்லா காசாகி விட்ட சிலரை கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தனக்கு அருகில் வைத்துக்கொண்டு, மேற்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்துவிட்டனர். கடந்த முறை பேட்டியளித்த பிறகு எனக்கு வாட்ஸ்அப்பில் மிரட்டல் வந்துள்ளது. இந்த மிரட்டலுக்கெல்லாம் நான் எப்போதும் அஞ்சுபவன் அல்ல. அவரை நேரடியாக எதிர்க்கொள்ள தயாராகவே இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.