அதிமுகவின் 53வது ஆண்டு துவக்க விழா வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, நான்கு நாட்கள் அ.தி.மு.க 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், எம்.ஜி.ஆரை பற்றி ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார். ஆந்திரா மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘எம்ஜிஆர்’ மீதான எனது அன்பும் அபிமானமும், சென்னையில் நான் வளர்ந்ததில் ஒரு அங்கம். அது இன்னும் அப்படியே இருக்கிறது. அதிமுகவின் 53-வது தொடக்க நாளான அக்டோபர் 17ஆம் தேதி எம்.ஜி.ஆரின் அன்பர்கள், அபிமானிகள், ரசிகர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
மயிலாப்பூரில் படிக்கும் போது எனது தமிழ் மொழி ஆசிரியர் மூலம் எம்.ஜி.ஆர் பற்றி எனக்கு முதல் அறிமுகம் கிடைத்தது. அவர், திருக்குறளில் இருந்து ஒரு குறளைப் படித்து, புரட்சித் தலைவரின் குணங்கள் இந்தத் திருக்குறளில் பிரதிபலிக்கின்றன என்றார். ‘கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி’. நன்மை, கருணை, நேர்மை, மக்கள் மீது அக்கறை ஆகிய நான்கும் கொண்ட அரசர்களுக்கு ஒளி போன்றவன்’ எனப் பதிவிட்டுள்ளார்.